பண்டிகைக் காலங்களில் வாகனங்களைச் செலுத்தும்போது அவதானமாகச் செயற்படுங்கள் - காவல்துறை!
பண்டிகைக் காலங்களில் வாகனங்களைச் செலுத்தும்போது அவதானமாகச் செயற்பட வேண்டும் என காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மதுபானம் அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதனை முற்றாகத் தவிர்க்க வேண்டும் எனவும் காவல்துறையினர் பொதுமக்களைக் கோரியுள்ளனர்.
பண்டிகைக் காலங்களில் வழமையாக அதிகளவில் விபத்துக்கள் இடம்பெறுவதனால் அவதானத்துடன் செயற்பட வேண்டும் எனவும் காவல்துறையினர்.
இதேவேளை, ஹட்டன் மல்லியப்பு பகுதியில் நேற்று மூவருக்கு மரணத்தை ஏற்படுத்திய பேருந்து விபத்துக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை.
விபத்து தொடர்பில் சாரதியிடம் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக ஹட்டன் காவல்துறையினர் தெரிவித்தனர்.
அத்துடன், பேருந்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கெமரா அமைப்பினூடாக விசாரணைகள் நடத்தப்படவுள்ளதாகவும் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
ஹட்டனில் இருந்து கண்டி நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த தனியார் பேருந்தொன்று நேற்று ஹட்டன் - மல்லியப்பு பகுதியில் விபத்துக்குள்ளானது.
பேருந்து வீதியை விட்டு விலகிச் சுமார் 20 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது.
விபத்தின் போது பேருந்தில் சுமார் 60 பயணிகள் இருந்ததுடன், அவர்கள் காவல்துறை மற்றும் பிரதேசவாசிகளின் உதவியுடன் விரைவாக மீட்கப்பட்டு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த விபத்தில் ஹட்டன் தோட்டத்தைச் சேர்ந்த 14 வயதுடைய சிறுவன் ஒருவரும், பெண் ஒருவரும், கண்டி பிரதேசத்தைச் சேர்ந்த 68 வயதுடைய ஆண் ஒருவரும் உயிரிழந்தனர்.
குறித்த விபத்தில் காயமடைந்த பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனர் உட்பட 53 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹட்டன் காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
0 Comments