இலங்கையில் தனியார் மருந்தகங்கள் மூடப்படும் அபாயம்: மருந்தாளர்கள் பற்றாக்குறை முக்கிய காரணம்!!
தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபையின் புதிய விதிமுறைகள் காரணமாக, நாடு முழுவதும் தனியார் மருந்தகங்கள் மூடப்படும் அபாய நிலை ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இலங்கையில் சுமார் 5,100 தனியார் மருந்தகங்கள் செயல்படுகின்றன. இதுவரை, மருந்தகம் ஒன்றை பதிவு செய்வதற்காக தகுதிவாய்ந்த மருந்தாளரின் பதிவு சான்றிதழ் தேவையாக இருந்தது. ஆனால், சமீபத்திய விதிமுறைகளின்படி, தகுதிவாய்ந்த மருந்தாளர் ஒருவர் மருந்தகத்தில் முழுநேரமாக இருக்க வேண்டும் என அவசியமாக்கப்பட்டுள்ளது.
மருந்தக உரிமையாளர்கள் சங்கம் எச்சரிக்கை:
சங்கத்தின் தலைவர் சண்டிக கங்கந்த கூறுகையில், “இந்த புதிய விதிமுறைகள் பல மருந்தகங்களை மூடும் நிலைக்கு தள்ளும். குறிப்பாக கிராமப்புறங்களில் உள்ள மருந்தகங்கள் மூடப்படுவதால், அந்த இடங்களில் பொதுமக்கள் மருந்துகளை பெற கடினமாகிறது. அவர்கள் அதிக தூரம் பயணம் செய்ய வேண்டிய நிலை உருவாகும்,” என கூறினார்.
தகுதிவாய்ந்த மருந்தாளர்களின் பற்றாக்குறை முக்கிய சிக்கலாக உள்ளது. நாடு முழுவதும் 6,700 மருந்தாளர்கள் மட்டுமே பணியாற்றி வருகின்றனர், எனவே புதிய விதிமுறைகளை நிறைவேற்றுவது தற்போதைய சூழ்நிலையில் சாத்தியமற்றதாக இருக்கலாம்.
சங்கத்தின் கோரிக்கை:
மருந்தகங்களில் மருந்தாளர்கள் பதிவு முறையை நீக்குவது சங்கத்தின் நோக்கமல்ல. ஆனால், தகுதிவாய்ந்த மருந்தாளர்களின் பற்றாக்குறையை சரிசெய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அவசரக் கோரிக்கையாக இருக்கிறது.
அதிகாரசபையின் நிலைபாடு:
தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை, மருந்தகங்கள் தகுதியான நிபுணர்களின் மேற்பார்வையில் இயங்க வேண்டும் என்ற அறிவிப்பை உடனடியாக செயல்படுத்தும் நிலைப்பாட்டில் உள்ளது.
இந்த விவகாரம் தொடர்பில் உரிய தீர்வுகள் மேற்கொள்ளப்படாவிட்டால், தனியார் மருந்தகங்கள் மூடப்படுவதால் நாட்டில் மருத்துவ சேவைகள் மோசமடையும் அபாயம் உள்ளது.
_Srilanka Tamil News_
0 Comments