Ticker

10/recent/ticker-posts

இலங்கையில் 30,000 ஆசிரியர் வெற்றிடங்கள் – கல்வி தரம் பாதிக்கப்படும் அபாயம்!!

 இலங்கையில் 30,000 ஆசிரியர் வெற்றிடங்கள் – கல்வி தரம் பாதிக்கப்படும் அபாயம்!!

கொழும்பு: இலங்கையில் 30,000 ஆசிரியர் வெற்றிடங்கள் இருப்பதாக கல்வி அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது. ஆங்கிலம், கணிதம், விஞ்ஞானம் உள்ளிட்ட முக்கிய பாடங்களில் இந்த வெற்றிடங்கள் காணப்படுவதாகவும், இதன் காரணமாக மாணவர்களின் கல்வியியல் வளர்ச்சி பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ கூறியதாவது, “இடமாற்றங்கள் மற்றும் வெற்றிட நிரப்பல் தொடர்பான சிக்கல்களால் ஆசிரியர்கள் தங்களது பணிகளை முறையாக செய்ய முடியாத சூழல் நிலவுகிறது. புதிய ஆசிரியர்களை விரைவில் பணியமர்த்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டிய அவசியம் உள்ளது” என அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின், “வெற்றிடங்களை நிரப்ப முடியாததால் ஆசிரியர்கள் இடமாற்றம் பெற முடியாத நிலை உருவாகியுள்ளது. புதிய பணியமர்த்தல்களுக்கு அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதேசமயம், அடுத்த வரவு செலவுத் திட்டத்தில் ஆசிரியர்களுக்கும் அதிபர்களுக்கும் சம்பள உயர்வு வழங்க வேண்டும்” என வலியுறுத்தினார்.

இவ்வகை நடவடிக்கைகள் துரிதமாக முன்னெடுக்கப்படாவிட்டால், தேசிய கல்வித் தரம் மேலும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக அவர் எச்சரித்தார்.

அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்தும் சம்பள முரண்பாடுகளை எதிர்கொண்டு வருவதாக தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. அவர்களின் அடிப்படை கோரிக்கைகளை அரசாங்கம் நிறைவேற்றத் தவறினால், எதிர்காலத்தில் வேலைநிறுத்த போராட்டங்கள் நடத்தப்படும் என அவர்கள் எச்சரித்துள்ளனர்.

இதனிடையே, புதிய ஆசிரியர்களை தகுதிப்படுத்த மற்றும் ஆசிரியர் இடமாற்றங்களைச் சரிசெய்ய கல்வி அமைச்சு விரைவில் ஒரு திட்டம் அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

_Srilanka Tamil News_


Post a Comment

0 Comments