சேவை நேரத்தில் வைத்தியசாலைக்கு வருகை தராத வைத்தியர்கள்: அவதியுறும் மக்கள்!!
கிண்ணியா - காக்காமுனை ஆரம்ப சுகாதார பராமரிப்பு நிலையத்தில், கடந்த நான்கு நாட்களாக வைத்தியர் பணியில் இல்லாததால், பல நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் அவதியுறுகின்றனர். இதனால் பொதுமக்கள் பெரும் அதிருப்தி மற்றும் கவலை தெரிவித்துள்ளனர்.
கடந்த 25ஆம் தேதி, அங்கு பணியாற்றிய வைத்தியர், சிகிச்சைக்காக வந்த ஒரு குழந்தையின் தந்தையுடன் வாய் தர்க்கத்தில் ஈடுபட்டதாகவும், அதன் பின்னர் சுகவீன விடுமுறையில் இருப்பதாக கூறப்படுகிறது. அதற்குப் பிறகு, அந்த வைத்தியர் தற்போதுவரை கடமையில் வரவில்லை.
இன்று (28) காலை, கிண்ணியா கச்சக்கொடதீவு வைத்தியசாலையில் கடமையாற்றும் மற்றொரு வைத்தியர், நோயாளிகளை சந்தித்தார், ஆனால் 15 நிமிடங்களில் சேவையை நிறுத்தி, தனது வைத்தியசாலைக்கு சென்று விட்டதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். இதனால், மேலும் பல நோயாளிகள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பியுள்ளனர்.
இந்த சம்பவத்திற்கு தொடர்பான விசாரணைகள் நடைபெற்று வருவதாக, கிண்ணியா பொலிஸார் கூறியுள்ளனர். 27ஆம் தேதி, குறித்த வைத்தியர், தனது முறைப்பாட்டின்படி, முறைப்பாடு செய்யப்பட்ட நபரைக் குறித்த விசாரணைக்காக, இன்று (28) விசாரிக்க உள்ளனர்.
சுகாதார துறையால் இந்த பிரச்சினை விரைந்து தீர்க்கப்பட வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
Srilanka Tamil News
0 Comments