மருத்துவர் மீதான தாக்குதல் – 24 மணிநேர பணிப்புறக்கணிப்பில் மருத்துவர்கள்!!
அனுராதபுரம்: அனுராதபுரம் போதனா மருத்துவமனையில் பணியாற்றும் பெண் மருத்துவர் ஒருவர் மீது நடந்த தவறான செயலுக்கு எதிராக, அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) மற்றும் மருத்துவ நிபுணர்கள் சங்கம் இணைந்து நாடு தழுவிய 24 மணிநேர அடையாள பணிப்புறக்கணிப்பை இன்று (மார்ச் 12) காலை 8:00 மணி முதல் ஆரம்பித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், மருத்துவர்கள் மீது இடம்பெறும் வன்முறைகளை கண்டித்து, விரைவான, பாரபட்சமற்ற விசாரணை நடத்தவும், குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தவும், அதிகாரிகளிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மருத்துவர்கள் கோரிக்கைகள்
மருத்துவமனைகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளை உடனடியாக உறுதி செய்ய வேண்டும்.
இரவு நேரங்களில் பணிபுரியும் பெண் மருத்துவர்கள் மற்றும் பயிற்சி பெறும் மருத்துவர்களுக்கு பாதுகாப்பான தங்குமிடங்கள் வழங்கப்பட வேண்டும்.
எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
அரச மருத்துவ சங்கம், மருத்துவர்கள் எந்தவித அச்சமின்றி பணியாற்றும் சூழல் உருவாக வேண்டியது கட்டாயம் என்று வலியுறுத்தியுள்ளது. மேலும், அவசர சிகிச்சை மற்றும் அவசர பிரிவு சேவைகள் தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவர்களின் பாதுகாப்புக்கு உறுதிசெய்ய அதிகாரிகள் எவ்வாறு நடவடிக்கை எடுப்பார்கள் என்பது கவனிக்கப்பட வேண்டிய முக்கியமான விடயமாக உள்ளது.
Srilanka Tamil News
0 Comments