யாழில் நண்பர்களுடன் கடலில் குளிக்க சென்ற இளைஞன் சடலமாக மீட்பு!!
யாழ்ப்பாணம் சேந்தாங்குளம் கடலில் நண்பர்களுடன் குளிக்கச் சென்ற 20 வயது இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
இணுவில், கோவில் வாசல், காங்கேசன்துறை வீதியைச் சேர்ந்த பி.சாருஜன் என்பவரே இன்று (21) இந்த சோக சம்பவத்தில் உயிரிழந்தார்.
சாருஜன் தனது 14 நண்பர்களுடன் இன்று மதியம் இளவாலை – சேந்தாங்குளம் கடல் பகுதியில் குளிக்கச் சென்றுள்ளார்.
குளித்துக்கொண்டிருந்த போது திடீரென கடலின் பாரிய அலையில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார். அவரது நண்பர்கள் மற்றும் சுற்றியுள்ளவர்கள் உடனடியாக தேடுதல் பணிகளை முன்னெடுத்தனர்.
பின்னர், சாருஜனின் சடலம் கரை ஒதுங்கியது.சம்பவத்திற்குப் பிறகு, திடீர் மரண விசாரணை அதிகாரி ஜெயபாலசிங்கம் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டார். மேலும், உடற்கூற்று பரிசோதனைக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சேந்தாங்குளம் கடல் பகுதி அதிக அலைகளால் அபாயகரமான இடமாகவே இருந்து வருகிறது. இருந்தாலும், இதுவரை அங்கு எச்சரிக்கை பலகைகள் அல்லது பாதுகாப்பு அறிவிப்புகள் நிறுவப்படவில்லை.
முன்னதாகவும் இதே பகுதியில் உயிரிழப்பு சம்பவித்துள்ளதைச் சமூகம் நினைவுபடுத்தி, பொது பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள அதிகாரிகள் உடனடியாக செயற்பட வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Srilanka Tamil News
0 Comments