மிளகாய்தூளை தூவி திருட்டு! சந்தேக நபருக்கு விளக்கமறியல்!!
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு மற்றும் இரணைப்பாலை பகுதிகளில் தொடர்ச்சியாக இடம்பெற்ற திருட்டுச் சம்பவங்கள் தொடர்பாக இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புதுக்குடியிருப்பு வேணாவில் பகுதியில் கடந்த 08.03.2025 அதிகாலை 2.30 மணியளவில் வீட்டிற்குள் புகுந்த அடையாளம் தெரியாத நபர், வீட்டில் இருந்தவர்களுக்கு மிளகாய்தூளை தூவிய பின்னர், 5,95,000 ரூபா பெறுமதியான தங்கச்சங்கிலியை திருடிச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட நபர் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததன் அடிப்படையில், பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு சந்தேகநபரை கைது செய்தனர். 34 வயது குறித்த சந்தேகநபர், விசாரணைகளின் பின்னர் நேற்றைய தினம் (12.03.2025) நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு, எதிர்வரும் 25.03.2025 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இரணைப்பாலை பகுதியில் பட்டப்பகலில் திருடிய இளைஞர் கைது
மேலும், புதுக்குடியிருப்பு இரணைப்பாலை பகுதியில் வீட்டுக் கதவை உடைத்து 6,10,000 ரூபா பெறுமதியான தங்க நகைகளை திருடிய சம்பவம் கடந்த 25.02.2025 அன்று இடம்பெற்றது. இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட பொலிஸார், யாழ்ப்பாணம் பருத்தித்துறையைச் சேர்ந்த 24 வயது இளைஞரை கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர் நேற்றைய தினம் (12.03.2025) முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு, எதிர்வரும் 25.03.2025 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இரண்டு சம்பவங்களும் தொடர்ச்சியாக இடம்பெற்றுள்ள நிலையில், பொலிஸார் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி, மேலும் சந்தேகநபர்கள் உள்ளதா என்பது தொடர்பிலும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
- Srilanka Tamil News
0 Comments