Ticker

10/recent/ticker-posts

காதலியை கொன்று எரித்ததாக காதலன் கைது - ஓடையில் என்ன நடந்தது?!!!

காதலியை கொன்று எரித்ததாக காதலன் கைது - ஓடையில் என்ன நடந்தது?!!

திண்டுக்கல் மாவட்டத்தில் காதலியைக் கொன்று, உடலை எரித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார் என தினத்தந்தி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

அந்தச் செய்தியின் படி, திண்டுக்கல் மாவட்டம் பன்றிமலையை அடுத்த அமைதிச்சோலை வனப்பகுதியில் உள்ள ஓடை அருகே, இளம்பெண் ஒருவர் உடல் எரிந்த நிலையில் கடந்த 13ஆம் தேதி பிணமாக கிடந்தார்.


இதுகுறித்து தகவல் அறிந்த கன்னிவாடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலைக் கைப்பற்றினர். மேலும் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தினர்.

அப்போது வழிநெடுகிலும் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் 12ஆம் தேதி ஒரு மோட்டார் சைக்கிளில் இளைஞருடன், இளம்பெண் ஒருவர் செல்வதும், பிறகு அந்த இளைஞர் மட்டும் தனியாக திரும்பி சென்ற காட்சியும் பதிவாகி இருந்தது.

வாகனத்தின் பதிவு எண்ணை வைத்து, அதன் உரிமையாளர் முகவரியை போலீசார் கண்டுபிடித்தனர். மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர், திண்டுக்கல் மாவட்டம் கைலாசம்பட்டியை சேர்ந்த பிரவீன் (வயது 23) என்பது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. இந்த கொலை சம்பவம் குறித்து போலீசார் கூறியதாவது:-

"பிரவீனுடன் வந்த இளம்பெண், மதுரையில் உள்ள தனியார் ஆதரவற்றோர் இல்லத்தில் வசித்து வந்த மாரியம்மாள் (21). இருவரும் காதலித்து வந்துள்ளனர்.

சம்பவத்தன்று திண்டுக்கல்லில் இருந்து மோட்டார் சைக்கிளில் பிரவீனும், மாரியம்மாளும் அமைதிச்சோலை பகுதியில் உள்ள ஓடைக்கு வந்துள்ளனர். அப்போது மாரியம்மாள், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு பிரவீனை வற்புறுத்தி உள்ளார். இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த பிரவீன், மாரியம்மாளை கீழே தள்ளி விட்டார்.

பாறை மீது விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே மாரியம்மாள் இறந்தார். காதலி இறந்ததைப் பார்த்து பிரவீன் அதிர்ச்சி அடைந்தார்.

மாரியம்மாளை கொலை செய்ததை யாருக்கும் தெரியாமல் மறைக்க முடிவு செய்து, மாரியம்மாள் உடல் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்தார்" என போலீசார் தெரிவித்தனர் என்று அந்தச் செய்தி கூறுகிறது.

'பெங்களூரில் வசித்து வந்த முன்னாள் டி.ஜி.பி. ஓம்பிரகாசை, அவரது மனைவியே கொலை செய்தது குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது' என தினத்தந்தி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

பெங்களூரு எச்.எஸ்.ஆர். லேஅவுட்டில் வசித்து வந்தவர் ஓம்பிரகாஷ் (வயது 68). இவர், முன்னாள் போலீஸ் டி.ஜி.பி. ஆவார். அவரது மனைவி பல்லவி. இந்த தம்பதிக்கு கார்த்திகேஷ் என்ற மகனும், கிருதி என்ற மகளும் உள்ளனர். கார்த்திகேசுக்கு திருமணமாகி விட்டது.

கடந்த ஞாயிறு அன்று (ஏப்ரல் 20) மாலை 4 மணியளவில் ஓம்பிரகாஷ் தனது மனைவி பல்லவியால் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார் என்றும், இந்த கொலை சம்பவம் பெங்களூரு மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது என்றும் தினத்தந்தியின் செய்தி கூறுகிறது.

மேலும் அந்தச் செய்தியில், 'குடும்ப பிரச்னை, சொத்து விவகாரத்தில் மனைவியுடன் தகராறு ஏற்பட்டு இருந்ததால், தனது தங்கையின் வீட்டுக்கு ஓம்பிரகாஷ் சென்றிருந்தார். 2 நாட்களுக்கு முன்பு மீண்டும் தனது வீட்டுக்கு வந்திருந்தார். ஆன்லைன் மூலமாக ஓட்டல்களில் உணவு ஆர்டர் செய்து அவர் சாப்பிட்டு வந்துள்ளார்.

அந்த சந்தர்ப்பத்தில் தான் மனைவிக்கும், அவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறு முற்றவே முதலில் ஓம்பிரகாஷ் கண்ணில் மிளகாய் பொடி மற்றும் கொதிக்கும் எண்ணெயை பல்லவி ஊற்றியுள்ளார். பின்னர் போர்வையால் ஓம்பிரகாசின் முகத்தை சுற்றியதால், அவரால் எதுவும் செய்ய முடியாமல் தரையில் நிலைகுலைந்து விழுந்துள்ளார். அந்த சந்தர்ப்பத்தில் 10-க்கும் மேற்பட்ட முறை வயிறு, நெஞ்சு, கழுத்தில் குத்தி பல்லவி கொலை செய்தது தெரியவந்துள்ளது.' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் கணவரை கொலை செய்வது எப்படி?, இந்த கொலையில் இருந்து சட்டப்பூர்வமாக எப்படி தப்பிப்பது என்பது பற்றி கூகுளில் பல்லவி தேடிய தகவல்களும் விசாரணையில் தெரியவந்துள்ளது என்றும், இதன் மூலமாக கடந்த சில நாட்களாக தனது கணவரை தீர்த்து கட்ட பல்லவி திட்டம் தீட்டி கொலையை அரங்கேற்றியதும் தெரியவந்துள்ளது .

#sltamilnews @SrilankaTamilNews

Post a Comment

0 Comments